துபாய்: இலங்கை அணியுடனான போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணியுடன் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட தொடரில் இருந்து வெளியேறிவிடும்.
இலங்கை போட்டி இந்த முக்கியமான போட்டிக்கு இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ரோகித் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளார். ஓப்பனிங்கை பொறுத்தவரையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் வழக்கம் போல களமிறங்குகின்றனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் என பலமான வரிசையில் உள்ளது
பண்ட் நீக்கமா? மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்-ஐ பயன்படுத்தினால் சொதப்பும் என்பது கடந்த போட்டியில் தெரியவந்துவிட்டது. எனவே சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கை மீண்டும் அணிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். கடந்த போட்டியில் சற்று சொதப்பிய ஹர்திக் பாண்ட்யா இன்று மீண்டும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்ஷரின் கம்பேக் ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு கடந்த போட்டியில் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டிருந்தார். பேட்டிங்கில் சிறப்பாக இருந்த போதும், பவுலிங்கில் அவருக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கப்படவில்லை. எனவே இன்றைய போட்டியில் ஹூடா நீக்கப்பட்டு, அக்ஷர் பட்டேல் சேர்க்கப்படுவார் என தெரியவந்துள்ளது. அக்ஷர் பட்டேல் ஸ்பின்னர் மட்டுமல்லாது பேட்டிங்கிற்கும் உதவுவார்.
அஸ்வினுக்கு இடம் ரவிச்சந்திரன் அஸ்வினை ஒதுக்கியதற்கு கடந்த போட்டியிலேயே இந்திய அணி பாடம் கற்றுவிட்டது. இலங்கை அணியின் டாப் ஆர்டரில் 3 இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே இடதுகை பேட்ஸ்மேனுக்கு எமனாக இருக்கும் அஸ்வினை சேர்த்தால் தான் இந்தியா தப்பிக்க முடியும். இதே போல பேட்டிங்கிற்கும் அவர் உதவுவார். அஸ்வினை சேர்ப்பதற்காக ரவி பிஷ்னாய் ஒதுக்கப்படலாம். யுவேந்திர சாஹல் வழக்கம் போல இடம்பெறுவார்.
வேகப்பந்துவீச்சு வேகப்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் துபாய் பிட்ச்-ல் சாதகமாக இல்லை. எனவே கடந்த போட்டியிலேயே புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தான் விளையாடினார்கள். 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டார். எனவே இன்றைய போட்டியிலும் இதே ஃபார்முலாவுடன் தான் இந்தியா களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.