Kallakurichi Student Parents Refuse To Submit Her Mobile Cbcid Says In Chennai | கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு | செல்போனை வழங்க மறுக்கும் பெற்றோர் | சிபிசிஐடி குற்றசாட்டு

மேலும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை மற்றும் மாணவியின் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த வழக்கின் விசாரணைக்கு பெற்றோர் ஒத்துழைப்பதில்லை என சிபிசிஐடி காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது,  புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி தரப்பிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்றக்கோரி கோரிக்கை விடுத்த நிலையில், அந்த வழக்கை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருவதால் இந்த மனுவை ஏன் முடித்து வைக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்,  உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை கண்காணித்து வருகிறது. ஏற்கனவே 2 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும், வழக்கு தொடர்பாக விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் அடங்கிய குறுந்தட்டை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஏற்கனவே, இந்த வழக்கின் புலன் விசாரணை முடியும் வரை வழக்கு தொடர்பான ஆவணங்களை மாணவியின் பெற்றோர் தரப்புக்கு வழங்க கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை சுட்டிக்காட்டிய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், வழக்கின் புலன் விசாரணைக்கு, மாணவியின் பெற்றோர் ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்தார். மேலும் விடுதியில் மாணவி பயன்படுத்திய மொபைல் ஃபோனை மற்றும் மாணவியின் மரபணு சோதனைக்கு மாதிரிகள் வழங்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, மாணவி செல்போன் பயன்படுத்தி இருந்தால் அதை புலன் விசாரணை செய்யும் சிபிசிஐடி காவல்துறையினரிடம் வழங்க வேண்டும் என மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் விசாரணையின் முன்னேற்றம் குறித்து அடுத்த அறிக்கையை அக்டோபர் 10 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *