தாயிடம் கருவை கலைக்க சொன்ன தந்தை | இதுவரை தந்தையை பார்த்தது இல்லை என டெல்லி வீரர் உருக்கம்

“தாயிடம் கருவை கலைக்க சொன்ன தந்தை”- இதுவரை தந்தையை பார்த்தது இல்லை என டெல்லி வீரர் உருக்கம்


தாய் வயிற்றில் தான் இருந்தபோது தந்தை கருவை கலைக்க சொன்னதாக டெல்லி வீரர் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

15-வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி 5 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் அதிரடி வீரராக செயல்பட்டு வருவபர் ரோவ்மன் பாவெல் . வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவரை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.80 கோடி கொடுத்து டெல்லி அணி விலைக்கு வாங்கியது.

ரோவ்மன் பாவெல் தற்போது தனது குடும்பம் குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பிரபல கிரிக்கெட் ஊடகத்திற்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

“நான் இதுநாள்வரை எனது தந்தையை நேரில் பார்த்தது இல்லை. என் தாய் என்னை வயிற்றில் சுமந்திருந்தபோது, கருவை கலைக்குமாறு எனது தந்தை என் தாயை வற்புறுத்தினார். ஆனால், என் தாய் ஜோன் அதற்கு உடன்படாமல் என்னைப் பெற்றெடுத்தார்.

ஜமைக்காவில் உள்ள பழைய துறைமுகத்துக்கு அருகே பானிஸ்டர் மாவட்டத்தில் 2 அறைகள் மட்டுமே இருக்கும் சிறிய வீட்டில்தான் நான் பிறந்தேன். என்னையும், என் சகோதரியையும் என் தாய் ஜோன்தான் சிரமத்துடன் வளர்த்தார்.

என் தாயைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகள் போதாது. நான் எப்போதெல்லாம் மனம் தளர்ந்து இருப்பேனோ அப்போது, நான் மனதில் நினைத்துக் கொள்வது எல்லாம் ஒன்று மட்டும் தான் “நான் எனக்காக எதையும் செய்யவில்லை. நான் என் தாய்க்காகவும், சகோதரிக்காகவும் செய்கிறேன் ” என நினைத்து கொள்வேன்.

இவ்வாறு ரோவ்மன் பாவெல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *