நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்காணவில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்.
நாமக்கல் மாவட்டத்தில் நூறு சதவீத ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு, ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டப் பயனாளிகளுக்கான நேர்காணல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களில் கால்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தற்போது அவர்களைப் பாதுகாப்போருக்கு உதவிடும் பொருட்டு, தமிழக அரசு கூடுதலாக ரூ. 1000 வழங்க உள்ளது. இதற்கான மாற்றுத்திறனாளிகள் நேர்காணல் நாமக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் கண் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மனநல மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருந்துவர் ஆகியோர் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, தகுதியின் அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் பார்வைக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு, தகுதியானோருக்கு ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் குருபிரகாசம், சுமதி ஆகியோர் தெரிவித்தனர்.