மாநிலத்தில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல் – பதற்றம் நீடிப்பு!

மாநிலத்தில் இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல் – பதற்றம் நீடிப்பு!

இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை அம்மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு:-

உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் தோன்றும் மூன்றாம் பிறை அன்று புனித ரமலான் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் இஸ்லாமியர்களின் வழக்கமாக மசூதியில் தொழுகை நடத்தாமல் ஒரு பெரிய திடலில் இஸ்லாமியர்கள் அனைவரும் கூடி தொழுகை நடத்தி சிறப்பாக கொண்டாடுவார்கள். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் நோன்பு மேற்கொள்வார்கள். இந்த நோன்பு பிறரின் கஷ்டத்தையும், பசியையும் உணர்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி நேற்று இந்தியா முழுவதும் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது இரு தரப்பினர்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அத்துடன் இதில் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் கலவரம் தீவிரமாக மாறியது. மேலும் இந்த கலவரத்தில் 4 போலீசார் உட்பட 10 பேர் காயமடைந்தனர். அதனால் கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி தற்போது ஜோத்பூர் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கலவரத்தை கட்டுப்படுத்த ஜோத்பூரில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது கலவரம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் பதற்றமான சூழல் உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. அதன்படி கலவரம் நடைபெற்ற பகுதிகளான ஜோத்பூரின் உதய் மந்திர், நகோரி கேட், கந்தா பல்சா, பிரதாப் நகர், தேவ் நகர், சூர் சகர் மற்றும் சர்தார்புரா உள்ளிட்ட பகுதிகளில் இன்று (மே 4) நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.