தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு? மே 12ல் பேச்சுவார்த்தை! அமைச்சர் அறிவிப்பு!

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு? மே 12ல் பேச்சுவார்த்தை! அமைச்சர் அறிவிப்பு!


தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் அனைத்து விதமான ஊழியர்களுக்கும், ஊதிய உயர்வு வழங்குவது குறித்து மே 12ம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் அளித்துள்ளார்.


ஊதிய உயர்வு:-


சமீப காலமாக ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக போக்குவரத்து துறையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத பட்சத்தில், இப்போது ஊதிய உயர்வு தொடர்பான சில தகவல்கள் வெளிவந்துள்ளது.


அதாவது, போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல் அளித்துள்ளார். அதாவது, தமிழக சட்டப்பேரவையில் இன்று (மே 5) போக்குவரத்து, சுற்றுலா மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த பேரவையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை குறித்து பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து மே 12ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணிப்பதை தடுக்க அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைக்கப்படும் என்றும், 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். அதனுடன், போக்குவரத்து துறையை மேம்படுத்தும் பொருட்டு, தானியங்கி பயணச்சீட்டு வழங்குதல், அரசு தானியங்கி பணிமனைகளை தரம் உயர்த்துதல், இணையவழி பயணச்சீட்டு முன்பதிவு போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.